Sunday, December 5, 2010

கவியரசருக்கு கவிஞர் வாலி

Posted by K. Ezhil Kumar | Sunday, December 5, 2010 | Category: |

கவியரசர் மறைந்த போது
காவியக் கவிஞர் வாலி அவர்கள்
வரைந்த கவிதாஞ்சலி...
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கண்ணதாசனே ! - என்
அன்பு நேசனே !

நீ தாடியில்லாத தாகூர் !
மீசையில்லாத பாரதி !

சிறுகூடற் பட்டியில்
சிற்றோடையாய் ஊற்றெடுத்து
சிக்காகோ நகரில்
சங்கமித்த ஜீவ நதியே !

உனக்கு மூன்று தாரமிருப்பினும் - உன்
மூலாதாரம் முத்தமிழே !

திரைப் பாடல்கள் உன்னால் -
திவ்வியப் பிரபந்தங்களாயின !
படக் கொட்டகைகள்
உன்னால் பாடல் பெற்ற ஸ்தலங்களாயின !

நீ ஆண் வேடத்தில்
அவதரித்த சரஸ்வதி !
கண்ணனின் கை நழுவி
மண்ணில் விழுந்த
புல்லாங்குழல் !

அயல் நாட்டில் உயிர் நீத்த
தமிழ்நாட்டுக் குயிலே !

பதினெட்டுச் சித்தர்களுக்கும்
நீ ஒருவனே உடம்பாக இருந்தாய் !

நீ பட்டணத்தில் வாழ்ந்த பட்டினத்தார் !
கோடம்பாக்கத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த
குணங்குடி மஸ்தானே !

நீ தந்தையாக இருந்தும்
தாய் போல் தாலாட்டுக்களைப் பாடியவன் !

இசைத் தட்டுகளில் மட்டுமல்ல -
எங்கள் நாக்குகளிலும் உன்
படப் பாடல்கள் பதிவாகியிருக்கின்றன !

உன் மரணத்தால் ஓர் உண்மை புலனாகிறது..
எழுதப் படிக்கத் தெரியாத எத்துணையோ பேர்களில் -
எமனும் ஒருவன்.
அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !

- கவிஞர் வாலி.

எத்தனையோ முறை இதயத்தில் அழுத்தமாய் பதிவாகியிருக்கும் இந்த வரிகள் -
கவிஞர் திலகம் வாலி அவர்களின் மனதிலிருந்து மலர்ந்த அர்ச்சனைப்பூக்கள்!!  ஒரு
கவியரங்கம் அதுவும் இரங்கற் கவியரங்கில் கைத்தட்டல்கள் வரிக்கு வரி பெற்றவர்
வாலி மட்டுமே என்றால் அது மிகையில்லை.  பாரதீய வித்யா பவனில் கவியரசரின் அண்ணன்
மகன் ஏ.எல்.எஸ்.கண்ணப்பன் அவர்கள் ஏற்பாடு செய்த இரங்கற்கூட்டத்தில் கவிஞர்
வாலி மொழிந்த கவிதையிது!

G.மகேந்திரன்

Currently have 0 comments:


Leave a Reply