Saturday, August 25, 2012
பன்மொழி பயின்ற பாவலர் ஆயினும்
சிந்திக்கும் மொழியோ தித்திக்கும் தாய்மொழி !
உள்ளத்தில் உறைந்திட்ட உறங்கிடும் உணர்வுகளை
உலகிற்கு உரைத்திட உதவிடும் தாய்மொழி !
எல்லையிலா எண்ணங்களை எழிலோடு வடித்திட
ஏற்றமிகு எழுதுகோல் என்றென்றும் தாய்மொழி !
இமைதிறந்த நாள்முதல் இதயம்நிற்கும் நேரம்வரை
குறையாத செல்வம் உடனிருக்கும் தாய்மொழி !
முகமறியா முகம்கூட உரிமையுடன் உறவாடி
முகவரியை முன்மொழியும் முத்தான தாய்மொழி !
உல்லாசப் பயணமாய் உலகையே சுற்றினாலும்
உடன்வருவது உயிரோடுக் கலந்திட்ட தாய்மொழி !
விந்தைமிகு விஞ்ஞானம் விண்ணளவு வளர்ந்தாலும்
வியத்தகு விளைச்சலின் வித்தாக தாய்மொழி !
அலுவல் ஆய்வென்று அயல்நாட்டை அடைந்தாலும்
அடையாளம் காட்டிடும் அவரவர் தாய்மொழி !
சுழலும் பூமிதனில் சுடரொளியாய் திகழ்ந்திட
ஒளியேற்றும் திருவிளக்கு நிகரில்லா தாய்மொழி !
யாசிக்கும் உயிர்களில் நேசிக்கும் நெஞ்சங்கள்
சுவாசிக்கும் காற்றே பேசுகின்ற தாய்மொழி !
மனமாற்றம் செய்திட்டு மதமாற்றம் செய்தாலும்
மாற்ற இயலாதது உயிரான தாய்மொழி !
வாழும் காலம்வரை வணங்கிப் போற்றிடுவோம்
இயங்கிடும் இதயத்தின் இதயமான தாய்மொழி !
[[ இணையதளத்திலிருந்து தமிழ் தாயகத்திற்காக ]]
என்றும் உங்கள் நண்பன்
கர்ணன்
கர்ணன்
Subscribe to:
Post Comments (Atom)
Currently have 0 comments: