Sunday, December 5, 2010
ஒரு கவிஞனின் எண்ணங்கள்...
கடல் கடக்கக் கடவுச்சீட்டு
கரம் வந்ததும்; மனம் குளிர்ந்து
முகம் மலர்ந்த குடும்ப உறவுகள்!
கரிசனத்தோடு நலம் விசாரிக்கும்
ஊர்வாசிகள் விசா வந்ததா என்று!
சிறு மூட்டைகளைக் கையில்
ஒளித்துக் கொண்டு
உறவுகளுக்கு அங்கே சேர்க்க
எண்ணங்கொண்டு!
பட்டியல் போட்டுக்
காதைக் குடையும் வாண்டுகள்
அது வேண்டும் இது வேண்டும் என்று!
பலகாரங்கள் பையை நிரப்ப
துணிமணிகள் ஒதுங்கிக்கொள்ள;
வியர்த்த கைகளில் கடவுச்சீட்டும்;
விமானச்சீட்டும்!
கட்டிப்பிடித்துக் கண்கள் அழ;
கூடவே மூக்கும் சேர்ந்துக்கொண்டு!
கனமான இதயத்துடன் காருக்குள் நான்;
முத்தத்தால் எச்சில் பட்ட நெற்றியுடன்;
ஏறி இறங்கும் மூச்சுடன்;
பணம் விளையும் பாலைக்குப் பயணம்!
சராசரி இந்தியக் குடிமகன்..
ஏழ்மைக்கு வாழ்க்கைப்பட்டு;
வறுமைக்குத் தோள்கொடுத்துத்
துவண்டு போய்;
வாக்காளனாக மட்டுமே;
வளரும் இந்தியாவின்
வாரிசுகள் நாங்கள்!
கட்டுக் கட்டாய் பணத்தோடு
குளியல் போடும் களவாணிகள்
எங்கள் அரசியல்வாதிகள்!
சிரிப்பு ரேகைகள் எங்கள் முகத்தில் தெரிய;
அடிக்கடி வரும் தேர்தல்கள்!
ஓட்டுக்கு மட்டும் கைகூப்பி;
முகம் திறந்த கொள்ளையர்கள்!
விரலுக்கு மை பூசி முகத்தில் கரி
பூசியதற்குப் பிறகு மறந்து போகும்
எங்களின் நினைவுகள்!
ஓட்டெடுப்பிற்கு மட்டும்
பயன்படும் இன்னொரு
இயந்திரம் - சராசரி
இந்தியக் குடிமகன்!
ஜலதோஷம்...
கிட்ட வரும் சொந்தங்களையும்
எட்டிப்போகச் செய்யும்;
உறங்கிக்கொண்டிருக்கும்
அமைதியையும் அரக்கத்தனமாய் கொல்லும்...
உதடு இரண்டும் முட்டி முட்டி
மூச்சுத் திணறும் முத்தம்;
கைக்குட்டையில் ஒளிந்து கொள்ளும்
தும்முகின்ற சப்தம்!
அடைபட்டுப் போன மூக்கால்;
தடைபட்டுப் போகும் சுவாசம்;
தோற்றுப்போன மோப்பத்தால்;
தோல்வி காணும் வாசம்!
கோர்த்துக் கொண்ட நீரால்;
தலைக்குக் கனம் ஏறும்;
ஏறிப்போன கனத்தால்
மாறிப்போகும் முகம்!
தும்மிக் கொண்டே இருப்பதால்
கம்மிப் போகும் குரல்;
தூறல் போடும் வாசலால்
ஈரமாகும் விரல்!
-யாசர் அரஃபாத்
Currently have 0 comments: